வன்னிய இன மக்களுக்கு முதல் எதிரியே பாமக கட்சிதான் என விசிக தலைவர் திருமாவளவன் அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள்  கட்சியினருக்கும், பாமக கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
 சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில்,  திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக மோதல் ஏற்பட்டது. இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் இந்த சம்பவம் குறித்து ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்து சர்ச்சைக்குரிய முறையில்   டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோதல் போக்கினை கண்டித்து அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவின் வழக்கறிஞர் பாலு, இந்த பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என்றும், ஸ்டாலினை சந்திக்கும் வரை மௌனம் காத்த திருமாவளவன், ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்படுகிறார்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.  அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக மட்டும் தான் விசிக திருமாவளவனுடன்  தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளார். 

இந்த நிகழ்வுக்குப் பிறகு இன்று விசிக நடத்திய கூட்டத்தில் பேசிய திருமாவளவன் வன்னிய இன மக்களுக்கு முதல் எதிரியே பாமக கட்சிதான் என்றும், நான் அரசியலில் இருப்பது பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். 

மேலும் உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் எனக்குத் தேவை. அந்த உழைக்கும் மக்கள் நிம்மதியாக இருக்க என்னோட அரசியல் வாழ்க்கையை விட தயார் என்றும் கூறினார்.