சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக மகளிரணி நிர்வாகிகளுக்கு சமூக வலைதளங்களில்  எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்த விவகாரத்தில், தொடர்ந்து பாஜகவிற்கு எதிர் கருத்துக்களை சொல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், கைது  செய்வதும் புதிதல்ல.பாஜக மகளிர் அணியினர் திருமாவிற்கு எதிராக புகார் அளித்து வருகின்றனர். காழ்ப்புணர்ச்சியினால் திருமா மீது புகார் கொடுப்பவர்களை  தண்டிப்பதை விட்டு விட்டு, மாறாக பிரச்சனையை உருவாக்க நினைக்கிறார்கள். 

ஒரு மதத்திற்குள் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதனை தலைவர்கள் எடுத்துக்கூறிய கருத்தை தான்,  திருமாவளவனும் மேற்கோள்காட்டி  பேசியிருந்தார். ஆனால் அதனை ஆயுதமாக  பாஜகவினர் கையில் எடுத்து பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். இதனை புறந்தள்ளி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். என்ன சதி செய்தாலும் எங்களது கூட்டணி ஒன்றினைந்து நின்று தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றார்.