ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் மிக கடுமையாக எதிர்வினை ஆற்றக்கூடிய தமிழக அரசியல் முக்கியஸ்தர்களில் முக்கியமானவர் திருமாவளவன். அவர் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் ஈழ விஷயத்தில் பொய் சொல்கிறார்! பிரபாகரனை வைத்து அரசியலில் பிழைக்கிறார்! என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் வெடித்ததில்லை. 
ஆனால் அதற்கு திருஷ்டிப்பொட்டாய் அமைந்துவிட்டது அவரது லண்டன் பயணம். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் ‘அமைப்பாய் திரள்வோம்’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் அறிமுக கூட்டம் லண்டனின் டிரினிட்டி மையத்தில் கடந்த 25-ம் தேதி நடந்தது. விம்பம் கலை, இலக்கிய திரைப்பட மற்றும் கலாசார மைப்பின் சார்பில் இது நடத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 இந்த நிகழ்வு நேரத்தில் ‘ஈழத்தில் தமிழர்களை  கொன்று குவித்த காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள்? அந்த கட்சி கூட்டு வைத்துள்ள தி.மு.க.வின் கூட்டணி தளத்தில் ஏன் இணைந்தீர்கள்? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்துப் பேசிய திருமா “2009 நாடாளுமன்ற தேர்தலின் போது விடுதலைப்புலிகளின் நிர்வாகி சேரலாதன் என்னை தொலை பேசியில்  தொடர்பு கொண்டார். ’காங்கிரஸை எதிர்த்து ஏன் அரசியல் நடத்துகிறீர்கள்? நீங்கள் எதிர்த்துப் பேச  பேச தமிழர்களின் மீதுதான் அதிக அளவில் குண்டு விழுகிறது.’ என்று கூறினார். பின்னர் தொலைபேசியை வாங்கிய புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியை தெரிவித்தார். அதாவது ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தியுங்கள்.’ எனத் தலைவர் கூறியதாக தெரிவித்தார். 

இதையடுத்தே நான் அறிவாலயம் சென்று, அக்கூட்டணியில் இணைந்தேன்.” என்பதுதான்.  திருமா இப்படி பதிலளித்துப் பேசியதும் அங்கிருந்த இருவர் அவருக்கு மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ‘பொய் பொய்!’ என்று கூக்குரலிட்டனர். 

லண்டனில் நடந்த இந்த நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதமாகி போயிருக்கிறது. திருமாவை தொடர்ந்து சில பேர் குறிவைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதுவரையில் சீமான் தான்! இப்போது திருமாவும் இணைந்து விட்டார்!....என்றெல்லாம் போட்டுத் தாக்குகின்றனர். 
இந்த நிலையில் தாய்பூமி திரும்பிய பின்னரும் இந்த பிரச்னைக்கு விளக்கம் கொடுத்திருக்கும் திருமாவளவன் “ஆமா! பிரபாகரனின் ஆலோசனையின் பேரில்தான் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தேன். இது பற்றி யார் என்ன விமர்சனம் செய்தாலும் எனக்கு கவலையில்லை. என் மீதான எத்தனையோ பழிகளில் இதுவும் ஒன்று.” என்றிருக்கிறார். 
அப்படியா திருமா!?