மதுரையில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஏற்கனவே நடந்த திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.  

மதுரை மாவட்ட ஊராட்சியில் 16-ஆவது வார்டில் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 9-இல் நடைபெறுகிறது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ்சேகரையும் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரனையும் சந்தித்து தேர்தல் தொடர்பாகப் புகார் மனு அளித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


அந்தப் புகாரில், “மதுரை மாவட்டம், 16-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி 97 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து 3 நாட்களுக்கு முன்பே புகார் மனு அளித்துள்ளோம். எனவே, 97 வாக்குச்சாவடிகளிலும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களை அச்சுறுத்துகின்றனர். வாக்காளர்களுக்கு சேலை கொடுக்கின்றனர்.
ஏற்கனவே நடந்த திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கின்றனர். எனவே, ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டும். முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிகளின்படியே நடக்க வேண்டும். குறிப்பாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராவை அமைக்க வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்'' என்று தெரிவித்திருந்தனர்.