ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கும் 8 வழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திந்த அவர், ’’மத்திய அரசின் 8 வழிச்சாலை திட்டம் மக்களுக்கு ஏற்புடையதா? என்று கேட்டறிந்து அமல்படுத்த வேண்டுமே தவிர அவர்களிடத்தில் திணிக்கக் கூடாது. ஒட்டுமொத்த தமிழகமே இந்த திட்டத்தை எதிர்க்கும் நிலையில் தமிழக முதல்வரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவப் படுகொலை நடைபெறுகிறது என்று கூறவில்லை. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலை நடைபெறுகிறது. இதை தடுப்பதற்குரிய முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாக உள்ளது.

சாதிய, மதவாத கட்சிகளால் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆணவ கொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்கக்கூடிய இக்கட்டான நிலையில் தவிக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.