thiripura assembly election commence today
திரிபுராவில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணிக் சர்க்கார் மீண்டும் 6 வது முறையாக முதலமைச்சராக வாய்ப்பு கிடைக்குமா ? என்பதை அம்மாநில மக்கள் இன்று முடிவு செய்வார்கள்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் உள்ள சட்டப் பேரவையின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த மாநில சட்டப் பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சாரிலாம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமேந்திர நாராயண் தேவ் வர்மா கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான தேர்தல் மார்ச் மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
மீதமுள்ள 59 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
60 தொகுதிகளிலும் மொத்தம் 307 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 60 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய பிற இடதுசாரி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

திரிபுராவைச் சேர்ந்த ஐபிஎஃப்டி எனும் திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. பாஜக மட்டும் 51 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எஞ்சிய 9 தொகுதிகளில் ஐபிஎஃப்டி கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கோமதி மாவட்டத்தில் உள்ள காக்ரபோன் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி,நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மார்ச் மாதம் 3ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
சிபிஎம், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இங்கு மும்முனைப்போட்டி உள்ளது. இந்தியாவிலேயே ஏழை மற்றும் எளிமையான முதலமைச்சர் என பெயரெடுத்த மாணிக் சர்க்கார் 6 ஆவது முறையாக மீண்டும் முதலமைச்சராவா? என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
