பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி செய்கிறார்கள். உதயநிதியை அமைச்சராக்க எதிர்ப்பு இல்லை என அரங்கேற்றும் நாடகம் இது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை பூந்தமல்லியில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சி அமைந்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து என்று அறிவித்தார். ஆனால், கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்கில் எங்களை மட்டும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? உதயநிதி ஸ்டாலின் மீதும் கொரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டன. தற்போது அவர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்வதற்காகவே இதை அறிவித்தார்களா என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் என் மீதுதான் மிக அதிகமாக வழக்குகள் போடப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்பது முதலில் தெரிய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம்தான் ஊக்குவிக்கப்படுகின்றன. வட இந்தியர்கள் தமிழகத்துக்குள் நுழைவதால் முதலில் உழைப்பில் இருந்து நம்மை வெளியேற்றுவார்கள். பின்னர் மண்ணில் இருந்து வெளியேற்றுவார்கள். இது நடக்கும். உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்து ஆண்டுகளுக்கு அவரை அமைச்சராக்க மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்களேன். அதன் பிறகு நான் இதைப் பற்றி பேசுகிறேன். பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி செய்கிறார்கள். உதயநிதியை அமைச்சராக்க எதிர்ப்பு இல்லை என அரங்கேற்றும் நாடகம் இது.” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திமுக அமைச்சர்கள் தொடங்கி அக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் பேசி வருகிறார்கள். உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனனை அமைச்சரக்கும்படி கட்சி தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மத்திய மாவட்ட திமுகவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சீமான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
