2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுக என்ற கட்சியே இருக்காது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மதுரை திருமங்கலம் தொகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகம் முழுவதும் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது, 

இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். இன்றைக்கு ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் சிறந்த திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி வழங்கிவருகிறார். இது இளைஞர்களின் நம்பிக்கை பெற்ற அரசாக செயல்பட்டு வருகிறது, சாலை மார்க்கமாக அதிக முறை பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை போக்கி வருகிறார், எடப்பாடி பழனிச்சாமியைபோல் இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் இதுபோன்று அதிகமாக சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்தித்தது கிடையாது. அதேபோல் கோட்டையில் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை, தமிழகத்தில் அனைத்து குக்கிராமங்களில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, ஆகியவற்றை வழங்கி அடிப்படை தேவைகளை 100% நிறைவேற்றியுள்ளார். 

கொரோனா என்ற வைரஸ் நோயை கட்டுப்படுத்தி இந்தியாவிற்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்று பாரத பிரதமரே  முதலமைச்சர் எடப்பாடியாரை பாராட்டியுள்ளார். அதிமுக இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்றும் வண்ணம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூட முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதனால் எதிர்க் கட்சிகள் தேர்தல் நேரத்தில் செய்யும் தில்லுமுல்லுகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைக்கும், வரும் தேர்தலோடு திமுக என்ற கட்சியை இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.