அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அமெரிக்கர்கள் சீன மொழியை கற்க வேண்டிய சூழல் ஏற்படும், எனவும் சீனாமொத்தமாக அமெரிக்காவை ஆளும்  எனவும் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். பிடன் சீனாவுடன் மென்மையான நிலைப்பாட்டை மேற்கொள்ள கூடியவர் எனவும் ட்ரம்ப் அவரை குற்றஞ்சாட்டிவருகிறார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் சீனா மற்றும் ரஷ்யாவின் தலையீடு அதிகமான உள்ளது எனவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  இந்தப் பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்க உள்ளது. வருகிற நவம்பர்3-ஆம் தேதி அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அந்நாட்டில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. 

கொரோனா வைரஸை கையாண்ட விதம், அதன் எதிரொலியாக தொடர் வேலை இழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதன் காரணமாக வரும் தேர்தலில் ட்ரம்பின் செல்வாக்கு குறையக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தேர்தலில்  தான் வெற்றி பெறுவது உறுதி என அதிபர் டிரம்ப் உறுதிபட கூறிவருகிறார். கொரோனா விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையிலெடுத்துள்ள நிலையில், ட்ரம்ப்,  ஜோ பிடன் சீன ஆதரவாளர் என்ற கருத்தை தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.  ஜோ பிடனுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவை அவர் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜோ பிடன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்கர்கள் சீன மொழியை கற்க வேண்டும் கூறியுள்ளார். 

ஏனெனில் அப்போது சீனா அமெரிக்காவை ஆளும் என்றும்,  தூக்கத்தில் உள்ள பிடன் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என சீனா விரும்புகிறது. ஜோ பிடன் வென்றால்தான் சீனாவால் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியும், அதைவிடவும் ஒரு உண்மை என்னவென்றால், அமெரிக்கர்கள் அனைவரும் சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உருவாகும்.  மொத்தத்தில் ஜோ பிடன் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதர் என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். மேலும் அதிபர் தேர்தலில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலையீடு அதிகம் உள்ளது. இருப்பினும் சீனாவிற்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கவனித்து வருகிறோம். குறிப்பாக ஈமெயில் மூலம் வாக்களிப்பது வாக்குச்சீட்டில் வாக்களிப்பதைவிட ஆபத்தானது. ஏனெனில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் அதில் சதி செய்ய கூடுமென ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.