சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா கர்நாடகாவின் பெருங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் சமீபத்தில் செலுத்தப்பட்டது.

சசிகலா விடுதலை குறித்து கர்நாடக ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த கேள்விக்கு, 2021-ம் ஆண்டு, ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது. அதேபோல், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு ஒரு நாள்கூட விடுமுறையில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை, தனது பதிலில் கூறியிருந்தது. அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையிலிருந்து எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. 

 இது குறித்த கேள்வியை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அந்தக் பதிலளித்த அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படாது என்று தெரிவித்தார். மேலும், சிறைச்சாலை விதிகளின்படியே அவர் விடுதலை செய்யப்படுவார். முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு  குறைவு. இந்த விஷயத்தில் சட்ட விதிமுறைகளுக்கு மட்டுமே முன்னுரிமை  கொடுக்கப்படும். சசிகலா விடுதலை விஷயத்தில் அரசின் தலையீடு இருக்காது என தெரிவித்துள்ளார்.