There is no place in Tamil Nadu for indecent and infringement

அநாகரீகத்துக்கும் வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை எனவும் தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை கடுமையாக விமர்சிப்பதை ஏற்க முடியாது எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எழுதியுள்ளார். 

இதுகுறித்த தகவலை அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல் ஒன்றில் ஆண்டாள் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்பு என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த தகவலை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து தெரிவித்தார். இதையடுத்து வைரமுத்துவின் பேச்சுக்கு ஹெச்.ராஜா கடும் தரக்குறைவான வார்த்தைகளா பாஜக நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசினார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த வைரமுத்து தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். 

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” என கூறியிருந்தார். 

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

அதாவது, அநாகரீகத்துக்கும் வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை எனவும் தரம் தாழ்ந்து கவிஞர் வைரமுத்துவை கடுமையாக விமர்சிப்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.