கூட்டணிக்கு எந்த பெரிய கட்சியும் அழைக்காத நிலையில், கமலுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வராத நிலையில் வேறு வழியே இல்லாமல் கமலை மக்கள் நீதி மய்யம் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் நகர்புற தொகுதிகளில் யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்றது. ஆனால் அதன் பிறகு கட்சியை வளர்க்க கமல் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. குறிப்பாக வேலூர் தொகுதி தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

இது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது. மேலும் ட்விட்டர் மற்றும் பிக்பாஸ் போன்றவற்றில் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை பார்க்க முடிந்தது. களத்தில் இறங்கி கமல் கட்சியினர் யாரும் வேலை செய்யவில்லை. இதனால் மக்கள் மட்டும் அல்ல அரசியல் கட்சிகள் கூட தற்போது மக்கள் நீதி மய்யத்தை கண்டுகொள்ளவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்து திமுகவிடம் கூட்டணி பேரம் பேச கமல் திட்டமிட்டிருந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைக்க கமல் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. ரஜினியும் தற்போது கட்சி ஆரம்பிப்பது போல் தெரியவில்லை. பாஜகவோடும், அதிமுகவுடனும் கமலால் கூட்டணி வைக்க முடியாது. இந்த சூழலில் தான் சென்னையில் கடந்த வாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மிகப்பெரிய பில்டப்புகளுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தை அக்கட்சியின் நிர்வாகிகள் கூட பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

இதே போல் ஊடகங்களும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவை கவர் செய்ய ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் என்று ஊடகங்கள் கூட நம்பவில்லை. இப்படி செயற்குழு கூட்டம் புஷ் என்று போனதால் என்ன செய்வதென்று தெரியாமல் கமலின் பிஆர்ஓ டீம் கைகளை பிசைந்து கொண்டிருந்தது. ஊடகத் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு கமிலின் பிஆர்ஓ டீம் எவ்வளவோ கேட்டும் யாரும் செயற்குழுவிற்கு லைவ் கவரேஜ் கொடுக்க தயாராக இல்லை.

இதனால் ஏதேனும் பரபரப்பாக அறிவித்தால் தான் ஊடகங்களின் கவனத்தை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று பிஆர்ஓ டீம் யோசனை தெரிவிக்க. அப்படி என்றால் கமலைமுதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிடலாம் அப்போது தான் ஊடகங்கள் நம் பக்கம் திரும்பும் என்று கூற அப்படியே அறிவித்துள்ளார்கள். அதாவது யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லை, என்று பிஆர்ஓ டீம் கூறியதால் இப்படி அறிவிப்பு வந்ததாக கூறுகிறார்கள். அதே சமயம் செயற்குழுவில் கமலுக்கு பல்வேறு அதிகாரங்களை கொடுத்துள்ளார்கள். 2021 தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது, தொகுதி உடன்பாடு செய்வது, வேட்பாளர் தேர்வு போன்றவற்றுக்கு எல்லாம் கமல் தான் அதிகாரமிக்கவர் என்பது தான் அந்த தீர்மானம்.

ஆனால் இதனை எல்லாம் வழக்கம் போல் கமல் கட்சியினர் மட்டும் அல்ல வேறு யாருமே பெரிதாக எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை. வழக்கமாக கமல் கட்சியின் இது போன்ற அறிவிப்புகள் ட்விட்டரில் டிரெண்டாகும் ஆனால் இந்த முறை அதுவும் நிகழவில்லை.