முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கருத்து வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றாக செயல்படுவதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளர்.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கருத்து வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றாக செயல்படுவதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் நீண்ட நாள் இழுபறிக்குப் பிறகு, அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தது. இந்த இணைப்பால், அதிமுக தொண்டர்கள் உற்காசமடைந்ததாக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் கூறி வந்தனர். 

இந்த அணிகளின் இணைப்பால், டிடிவி தினகரன் தரப்பினர் கடும் கோபம் அடைந்துள்ளனர். பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா நீக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், டிடிவி அணியினர், எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

மேலும், தங்கள் அணியினரை இழுக்கும் வகையில் குதிரை பேரம் நடக்கலாம் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, அதிமுகவினரால் நடத்தப்பட்டு வருகிறது. அரியலூரில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, சென்னை விமான நிலையம் சென்றார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அதிமுகவில் பிளவுகள் எதுவும் கிடையாது என்று கூறினார். அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாகவும், தமிழக அரசின் பெரும்பான்மையைக் குறித்து சட்டப்பேரவையில் மட்டுமே விவாதிக்க முடியும் என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.