சேலம்

எடப்பாடி நகராட்சியில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த எடப்பாடிக்கும் தற்போதுள்ள எடப்பாடிக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை எடப்பாடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நடைப்பெற்றது. 

இந்த விழாவிற்கு எடப்பாடி நகரச் செயலாளர் ராமன், ஒன்றிய செயலாளர்கள் எமரால்டு வெங்கடாஜலம், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், எடப்பாடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கதிரேசன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர்கள் மாதேஸ், கரட்டூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 5000 பேருக்கு தையல் இயந்திரம், குடம், சலவைப்பெட்டி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அதன்பின்னர் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது: "எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எடப்பாடிக்கும் தற்போதுள்ள எடப்பாடிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள். இதுவரை எடப்பாடி நகராட்சியில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளது.

எடப்பாடி நகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை போக்கிட ரூ.18 கோடியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

கௌண்டம்பட்டி வெள்ளாண்டி வலசை இடையே சரபங்கா ஆற்றின் குறுக்கே புதிய பாலம், எடப்பாடியில் புதிய கலைக் கல்லூரி கட்டப்பட்டது. எடப்பாடி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.4 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 322 பணிகளுக்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 38 ஆயிரத்து 306 பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 8 இலட்சத்து 11 ஆயிரத்து 431 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என பல பதவிகளை நான் வகித்து தற்போது முதலமைச்சராகி உள்ளேன். ஒரு வருடத்தில் 5500 கோப்புகளுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி உள்ளேன்.  எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. 

நடிகர்கள் புதிய கட்சிகள் தொடங்குகின்றனர். தன்னிடம் வேலைப்பார்த்த நடிகை கௌதமிக்கு கூட சம்பளம் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ள நடிகர் கமல்ஹாசன் எப்படி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்?. 

எம்.ஜி.ஆர்.ஆட்சி கொடுப்பதாக ஒருவர் கூறுகிறார். நாங்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியைதான் வழங்கி வருகிறோம்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் தமிழகத்தில் 75 ரௌடிகளை காவலாளர்கள் கைது செய்துள்ளனர். மேலும், கைதான ரௌடிகள் நான் ரௌடியே இல்லை என்று வாக்குமூலம் கொடுக்கிற அளவுக்கு காவல்துறை சிறப்பாக உள்ளது. ரௌடிகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டனர்.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி பூங்காவாக திகழ்கிறது. அதற்கு உதாரணமாக சென்னை, அண்ணாநகர், கோவை ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும் தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் 5 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கி வைத்து போராடி வருகின்றனர். 

சேலத்தில் அரியானூர், காக்காபாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 

தமிழகத்தில் மேலும் 2000 ஏரிகளுக்கு குடிமராமத்து பணிகள் செய்ய ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்க 3000 தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.136 கோடியில் 1,188 பண்ணை குட்டைகள் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமை சாலை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2019-ல் ஜனவரியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும். அதன்மூலம் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் இரண்டு இடங்களில் ரூ.1000 கோடியில் விமான உதிரிபாகங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும். விமான நிலையத்தில் உள்ள வசதிகளை போன்று சேலத்தில் பஸ்போர்ட் அமைக்கப்பட உள்ளது. 

தமிழகத்தில் சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைக்க ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேர் அம்மா இருசக்கர வாகனத்திற்காக பதிவு செய்துள்ளனர். அவர்களில் தகுதியுடைய நபர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. 

நான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து மக்கள் பிரச்சனைக்காக பாடுபடுவேன்" என்று இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, மருதமுத்து, சின்னதம்பி, சக்திவேல், சித்ரா, மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், பூலாம்பட்டி முன்னாள் பேரவை செயலாளர் பாலு, ஆவின் துணைத்தலைவர் ஜெயராமன், நகர கழக நிர்வாகிகள் சேகர், முருகன், செங்கோடன் உள்பட பலரும் பங்கேற்றனர். 

விழாவின் முடிவில் பேரவை பொருளாளர் நாராயணன் நன்றி தெரிவித்தார்.