நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் அளிக்க துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை தமிழகத்திற்கும் டெல்லிக்கும் நடையாய் நடந்து வருகின்றனர்.

இதனிடையே குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே பழனிசாமி தலைமையிலான அதிமுக வாக்கு அளித்தது.

அதேபோல் நடக்கவுள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலிலும் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், இன்று நடக்கவுள்ள ‘நீட்’ எதிர்ப்பு மனித சங்கிலி பேரணிக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் அளிக்க துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவரான முதலமைச்சர் அந்த நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

ஆனால் மத்திய அரசு தற்போது அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.