விரைவில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் எனவும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் மக்களவை மாநிலங்களவை கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சி கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. அதில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம், கொரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள்,  கட்சித் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். 

அப்போது கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் மொத்தம் எட்டு வகையான தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளதாகவும், இன்னும் சில வாரங்களில் மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என்றும் தெரிவித்தார். முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல், கொரோனா தடுப்பு  பணியில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்கள், முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார். தடுப்பூசி மருந்து விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற அவர், விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பு மருந்து போடும் பணி விரைவாக தொடங்கும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கும் பட்சத்தில் அந்தப் பரிந்துரைகள் திவிரமாக பரிசீலிக்கப்படும் எனவும் அவர் அப்போது உறுதி அளித்தார். 

அதாவது ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸிலிருந்து மீளமுடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் வைரஸை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் தடுப்பூசியை உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி, சோதித்து வருகின்றன. இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கோவி ஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியை பூனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது இந்நிலையில் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆகியவை இணைந்து இந்தியாவில் 15 நகரங்களில்  கோவி ஷீல்ட் தடுப்பூசி பரிசோதனையை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் உலகம் முழுவதும் கோவி ஷீல்ட் மூன்றாம் கட்ட பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாம் கட்ட பரிசோதனையை அதிரடியாக வெளியிட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி 80% ஆற்றல் மிக்கவை எனவும், இது மனிதர்களுக்கு செலுத்தும்போது 90% வரை பலனளிக்கிறது  எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தி, வளர்ச்சி மற்றும் அதன் செயல் திறனை பிரதமர் மோடி கடந்த வாரம் மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னும் பிற தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி ஆலைகளையும் அவர் நேரில் பார்வையிட்டார் என்பது  குறிப்பிடதக்கது.