தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் காத்திருக்கிறார். அதிமுக நாடாளுடன்ற உறுப்பினர் மைத்ரேயனை மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கி இருப்பதாக நிர்மலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸை சந்திக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவே டெல்லி வந்திருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக சந்திப்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். 

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஏர் ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.

ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் அதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் பேட்டியளித்திருந்தார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று டெல்லி வந்தனர். ஆனால் தற்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மறுப்பு தெரிவித்துள்ளார்.  

ஓபிஎஸ் பயணம் குறித்து பகீர் தகவல்

அரசு வேலையாக டெல்லிக்கு வரவில்லை என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரணையில் உள்ளது. அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளர் செய்யாதுரை வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மற்றும் நகைககள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக சொந்த பிரச்சனைகளை பற்றி பேசவே ஓபிஎஸ் டெல்லி சென்றதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா மூலவம் பிரச்சனையை தீர்க்க ஓபிஎஸ் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்ததால் துணை முதல்வர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் அவர் தமிழகம் திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.