ரஜினி எதிரில் திமுகவை அம்பலப்படுத்திய அல்டிமேட் ஸ்டார், 25 கோடிக்கு ஏலம் போன கம்யூனிஸ்ட், பங்கம் செய்த அதிமுக.
சுமார் ஆயிரம் கோடி ரூபாயை கணக்கெழுதி கொள்ளையடித்தார்களே அப்போதெல்லாம் முத்தரசன் போன்றோர் தங்கள் புலன்களை மூடிக்கொண்டு நின்றது ஏன்?
அரசு விழாவில் அரசியல் பேசலாமா என கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
மத்திய அரசை வழிநடத்தும் இயக்கமும், மாநில அரசை வழிநடத்தும் கழகமும் ஒன்றாக இணைந்து வருங்கால தேர்தலை சந்திப்போம் என்பதில் தவறு ஏதும் இல்லையே! இந்தியாவில் இன்ன பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் அரசாக, சமூகநீதி சட்டம்-ஒழுங்கு அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்கு, இந்திய அரசால் பாராட்டப்படும் மாநில அரசை வழிநடத்தும் கழகமும், மத்திய அரசை வழிநடத்தும் பாஜகவும் கொண்டிருக்கும் தோழமை வரவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணியாக தொடரும் என அறிவித்தது ஒன்றும் மரபுக்கு மாறானது அல்ல, சட்டத்துக்கு விரோதமானதும் அல்ல.
அதுசரி திமுக அள்ளி வீசிய 25 கோடி ரூபாய்க்கு விலை போன கம்யூனிஸ்டுகளுக்கு நினைவிருக்கிறதா? அன்று காங்கிரஸ் கட்சியின் தயவோடு மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா, பாசி பிடித்த தலைவனுக்கு பாராட்டு விழா என்று அரசு பணத்தை வைத்து ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட விழாக்களை நடத்தி, தங்களைத் தாங்களே கூலிக்கு ஆள் வைத்து பாராட்டி கொண்டார்களே, பாராட்டு விழாக்களில் பங்கேற்க மறுத்த கலைஞர்களை வீட்டுக்கே அழைத்து வந்து மிரட்டினார்களே, இவ்விவகாரம் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த மேடையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மூலம் அம்பலத்திற்கு வந்ததே அப்போதெல்லாம் முத்தரசன் எந்த முச்சந்தியில் ஒளிந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் கொங்கு தமிழ் பேசும் கோவை மண்டலத்தில் திமுக அதலபாதாளத்தில் கிடக்கிறது என்று அவசர அவசரமாக பன்னாட்டு தமிழ் நடுவம் அங்கீகரிக்காத தமிழ் மாநாடு ஒன்றை கோவையில் நடத்தியதற்கு செம்மொழி மாநாடு என்று பெயரிட்டுக் கொண்டு கனிமொழியை வைத்தே கவியரங்கம் நடத்தினார்களே.
அதன் பெயரிலேயே சுமார் ஆயிரம் கோடி ரூபாயை கணக்கெழுதி கொள்ளையடித்தார்களே அப்போதெல்லாம் முத்தரசன் போன்றோர் தங்கள் புலன்களை மூடிக்கொண்டு நின்றது ஏன்? அதேவேளையில் முடிந்த திட்டங்களையும் துவங்கும் புதிய திட்டங்களையும் காணொளி காட்சி மூலமாகவே நடத்தி நிர்வாக சிக்கனத்தை இந்தியாவிற்கு எடுத்துரைக்கும் அரசாக எடப்பாடி அரசு திகழ்கிறது. இதையெல்லாம் பாராட்ட மனமில்லாத கரன்சி கம்யூனிஸ்டுகள் பாஜகவின் உள்துறை அமைச்சரோடு பங்கேற்ற விழாவில் இரு இயக்கங்களுக்கான தோழமையை எடுத்துரைத்ததை மட்டும் மரபுக்கு மாறான செயல், சட்டப்படி குற்றம் என்றெல்லாம் வாய் சவடால் பேசுவது வெட்கக்கேடு அல்லவா? தங்கத்தை தரம் பார்த்து சொல்வதற்கு உரை கல்லுக்கு உரிமை உண்டு, ஆனால் கோடான கோடி பணத்திற்கு ஏலம் போன உண்டியல் கட்சிக்கு அது கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை குத்தீட்டி குத்தி கிழித்துள்ளது.