அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் மாநிலங்களவை எம்.பி.களாக உள்ளனர். இவர்கள் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகும் வாய்ப்பு இருந்ததால், தேர்தலில் போட்டியிட்டனர். கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி தொகுதியில் களமிறங்கினார். வைத்தியலிங்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தொகுதியில் களமிறங்கினர். இத்தேர்தலில் இருவருமே வெற்றி பெற்றனர்.


ஆனால், தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. எனவே, தற்போதைய நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றால், எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். ஒரு வேளை எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொண்டால், எம்.எல்.ஏ. பதவியைத் துறக்க வேண்டும். எப்படி இருந்தாலும் இரண்டில் எந்தப் பதவியைத் தக்க வைத்துக்கொண்டலும் இன்னொரு பதவியை இழக்க வேண்டும். அந்த இடங்களுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.