இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அவரை அமமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து அமமுகவை சேர்ந்த வீரவெற்றிப்பாண்டியனின் முகநூல் பக்க பதிவில், ’’அம்மா தான் அனைவருக்கும் அரசியல் அடையாளம் கொடுத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இன்னாருக்கு கொடுங்கள் என பரிந்துரைத்தது சின்னம்மாவும், அண்ணன் தினகரனும் தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

2009ல் கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளராக தளவாய்சுந்தரம் இருந்தபோது, எனது பரிந்துரையால் தான் இசக்கி பேரவை பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என அண்ணன் தினகரன் சொல்லியதை, அவர் அப்போது கட்சியில் இருந்தாரா என்பதே தெரிவியல்லை என்கிறாயே, அவர் ஜீன் 2010 வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் என்பது மறந்துவிட்டதா உனக்கு?

2011, மே மாதத்தில் நீ அமைச்சராக அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட பிறகு, அண்ணன் தினகரனுக்கு போன் செய்து, உங்கள் சந்தித்து ஆசிப்பெற வேண்டும் என கேட்டாயே, ஏன் என்று சொல்ல முடியுமா?. அவர் தான் கட்சியிலயே இல்லையே, அவரிடம் போய் ஆசி வாங்க வேண்டிய அவசியம் உனக்கு ஏன் வந்தது? நீ போன் செய்தபோது, அப்போது அருகில் இருந்தவன் நான், இதை உன்னால் மறுக்க முடியுமா?

நான் புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு தான், மாணிக்கராஜா மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டார், அவர் எப்படி எனக்கு பதவியை பரிந்துரைக்க முடியும் என்கிறாயே, அதிமுக (அம்மா) என அணியாக இயங்கிய போதே, அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டவர் மாணிக்கராஜா. பின்னர் அந்த பகுதியில் யாருக்கெல்லாம் பதவி வழங்கலாம் என தலைமை ஆலோசனை நடத்தியபோது, இசக்கிக்கு பதவி கொடுங்கள் என மாணிக்கராஜா தான் சொன்னார் என சொல்வதில் என்ன பொய் இருக்கிறது?

2017ல் இரட்டை இலை தீர்ப்பு வந்தது என்பதற்கு பதிலாக 2007 என பேச்ச ஓட்டத்தில் தலைவர் சொன்னதை, அவர் பதட்டத்தில் இருப்பதால் தான் மாற்றி சொல்கிறார் என்கிறாயே, ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என எழுதி வைத்து படிப்பவனை தலைமையாக ஏற்றுக்கொள்கிறவன் மாற்றிப் பேசுவதை பற்றி பேசலாமா?

2011ல் அம்மா தான் வாய்ப்பு கொடுத்தார், அமைச்சராக்கினார். ஆனால், ஏன் 48 நாளில் பதவியை நீக்கினார் என சொல்ல முடியுமா? அதன்பிறகு 2016ல் ஏன் மறுபடியும் சீட் வழங்கவில்லை என்பதை கூற முடியுமா? இந்த இடைப்பட்ட காலத்தில், அதிமுகவில் நீ வகித்த பதவி என்ன என்பதை சொல்ல முடியுமா? ஓரங்கட்டப்பட்ட வெறும் உறுப்பினராக தானே இருந்தாய்...

இன்று தான் அதிமுகவில் சேரப்போவதாக அறிவிக்கிறாய். ஆனால் அதற்கு முன்பே இணைப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் வேலை நடைபெறுகிறதே எப்படி? அமமுகவில் இருந்து விலகும் முன்னே, எடப்பாடியை சந்தித்து பேசியதுதான் தலைமைக்கான விசுவாசமா? தி.நகர் எம்.எல்.ஏ சத்தியாவுடன் இணைந்து வேலுமணியை சந்தித்து, நீ பேரங்களை நடத்தியது தலைமைக்கு தெரியாது என நினைக்கிறாயா?

ஜுன் முதல் வாரத்திலயே ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் அதிமுகவுக்கு செல்லலாம் என பேசினாயா? இது தான் நிர்வாகியின் பண்பா? போவது என முடிவு செய்தவிட்ட பின்னர், ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக, பதட்டத்தில் நீ உளறுவது தெளிவாக தெரிகிறது.

சின்னம்மா மற்றும் அண்ணன் தினகரனுக்கு எதிராக நடத்தப்பட்ட துரோக அரங்கேற்றத்தில் வேலுமணிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அப்படி இருக்கையில் அமமுகவில் இருக்கும் போதே வேலுமணியுடன் தொடர்பில் இருந்தேன் என்கிறாயே, இது தான் தலைமை மீதான விசுவாசமா? கூட இருந்துக்கொண்டே குழிப்பறிக்கும் குள்ள நரி வேலையை தானே இத்தனை நாட்களாக செய்துள்ளாய். சிங்கங்கள் உலவும் காட்டில், குள்ளநரிகள் இருக்க இயலாது, ஓடிவிடுவதே நரிகளுக்கு நல்லது, ஓடி விடு..!’’ எனக் கூறப்பட்டுள்ளது