அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தை அடுத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது  ஆதரவாளர்களின் வன்முறைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் இந்த வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ட்ரம்ப் ஏற்கவில்லை. தேர்தலில் தன்னை வீழ்த்த மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டிய  அவரும் அவரின் ஆதரவாளர்களும் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளும் எடுபடவில்லை. இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். 

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இது போன்ற நிகழ்வு நடந்ததில்லை என்று கூறும் அளவிற்கு அது மோசமாக வன்முறையாக இருந்தது. ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்த வன்முறைக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார்  160 வினாடிகள் ஓடும் இந்த  வீடியோவில் அவர், ஜனாதிபதியாக வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவது ஒரு மரியாதை மிக்க உணர்வு.  புதன்கிழமை நடைபெற்ற வன்முறை மிகவும் மோசமானது. கண்டிக்கத்தக்கது. அனைவரும் அமைதியை மீட்டெடுக்க வேண்டும். தலைநகரில் ஊடுருவிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை சேதப்படுத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் உண்மையான அமெரிக்கர்களாக இருக்க முடியாது. ஜனவரி 20ஆம் தேதி புதிய நிர்வாகம் அமைய உள்ளது. இப்போது எனது கவனம் அனைத்தும் சுமுகமான ஒழுங்கான மற்றும் தடையற்ற அதிகார பரிமாற்றத்தை உறுதி செய்வதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்தும் வன்முறையை பார்த்து நடனமாடி ரசிக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், டிரம்பும் அவரது மகள் இவான்காவும் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு தொலைக்காட்சித் திரைகளில் அமெரிக்க பாராளுமன்ற வளாக  வன்முறையைப் பார்க்கின்றனர். பின்னணியில் வேகமான இசையும் ஒலிக்கிறது. டிரம்பும் இவான்காவும் அதை கண்ணிமைக்காமல் ஆர்வத்துடன் ரசிக்கின்றனர். அதே நேரத்தில் அவர்களின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், அவரது காதலி கிம்பர்லி மற்றும் டிரம்ப்பின் தலைமை பணியாளர் மார்க் மெடோஸ் ஆகியோர் மகிழ்ச்சியாக செல்பி எடுத்து கொண்டாடு கின்றனர். டிரம்ப் குடும்பத்தைத் தவிர, சிலரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் அவரது காதலி கிம்பர்லி ஆகியோர் அதில் நடனம் ஆடி அதை கொண்டாடுகின்றனர். 

பின்னணியில் சில கோஷங்களும் கேட்கின்றன. இதில், ட்ரம்ப் போரைத் தொடருமாறு குரல் எழுகிறது. அதிபர் டிரம்பின் கையில் ஒரு தொப்பி உள்ளது. இதில் அமெரிக்காவை மீண்டும் கைப்பற்றுங்கள் என எழுதப்பட்டுள்ளது. 54 வினாடிகள் பதிவாகி உள்ள இந்த வீடியோ ஜூனியர் ட்ரம்பால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இப்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை காணும் மக்கள் இதை ஒரு மலிவான செயல் என்றும், இப்போது விஷயங்கள் தெளிவாக புரிகிறது. இவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடுகிறார்கள். வன்முறை அனைத்தும் டிரம்பின் திட்டம் என புரிகிறது என கடுமையாக ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.