சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மருமகள் உள்ளிட்ட மூன்று பேரை புனேவில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை யானைக்கவுனியில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கைதுப் படலம் நடந்துள்ளது. 

யானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74) இவரது மனைவி புஷ்பா பாய் (70) இவர்களுக்கு ஷீத்தல் (38) என்ற மகனும் பிங்கி (35) என்கிற மகளும் இருந்தனர். தலில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மூவரும் வீட்டில் இருந்தனர். மகள் பிங்கி மட்டும் வெளியில் சென்றிருந்தார். இதையடுத்த இரவு 8 மணி அளவில் பிங்கி வீடு திரும்பியபோது வீட்டின் படுக்கை அறையில் தாய், தந்தை தனது சகோதரர் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 

அக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்காமல் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் திட்டமிட்டு கொலையாளிகள் சைலன்சர் துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அல்லது சத்தமாக தொலைக்காட்சி வைத்தோ அல்லது கதவை பூட்டி விட்டோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அறிமுகமான நபர்களாலேயே இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. தீவிர விசாரணையில்,  கணவனைவிட்டு  பிரிந்து மகாராஷ்டிராவில் உள்ள மருமகளே தனது சகோதரர்களுடன் யானை கவுனிக்கு வந்து, கணவர் மற்றும் மாமியார், மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மற்றும் குடியிருப்புவாசிகள் மத்தியில் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. 

குடும்ப பிரச்சினையால் ஷீத்தல் மனைவி ஜெயமாலா தனது  சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோருடன் இணைந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதேபோல் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்ததில் கொலை நடந்த வீட்டில் இருந்து எவ்வித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலா அவர்களுடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் அதில் முக கவசம் அணிந்திருந்தனர் அவர்களின் நடை உடை பாவனைகளை வைத்து, வீட்டிலிருந்து வெளியே சென்றது ஜெயமாலா தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொலை சம்பவத்திற்கு பிறகு ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதாக தகவல்கள் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளை கைது செய்ய விமானம் மூலம் புனே விரைந்தனர்.

தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களை சென்னை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.