தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் 4 எம்.பி.க்களை இந்தக் கூட்டணியால் தேர்வு செய்ய முடியும். திமுகவுக்கு மட்டுமே தனித்து 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால், 4 எம்.பி.க்கள் பதவியையும் அக்கட்சி விசிக ஆதரவுடன் கைப்பற்றிவிட முடியும்.
வரும் ஜூன் மாதத்தில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான ரேஸ் தொடங்கியிருக்கிறது.
பதவிக் காலம் முடிவு
இந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு மாநிலங்களவையில் இருந்து 72 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிகிறது. இதில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்களின் பதவிக் காலமும் அடக்கம். திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி சோமு; அதிமுகவின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் என 6 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இவர்களுக்கான வழியனுப்பு விழாவையும் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்யா நாயுடு நேற்று நடத்தி முடித்தார். இந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், இதில் யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம், புதிதாக யாருக்காவது வாய்ப்பு கிடைக்குமா என்ற ரேஸ் திமுக, அதிமுகவில் தொடங்கியிருக்கிறது.
திமுகவுக்கு 4 எம்.பி.

தமிழகத்திலிருந்து ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்வதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது தமிழக சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் 4 எம்.பி.க்களை இந்தக் கூட்டணியால் தேர்வு செய்ய முடியும். திமுகவுக்கு மட்டுமே தனித்து 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதால், 4 எம்.பி.க்கள் பதவியையும் அக்கட்சி விசிக ஆதரவுடன் கைப்பற்றிவிட முடியும். இதேபோல அதிமுக - பாஜக சேர்த்து70 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருப்பதால் 2 எம்.பி.க்களை அதிமுகவால் கைப்பற்ற முடியும். இதில், திமுக சார்பில் தற்போது பதவிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ள ஆர்.எஸ். பாரதியும் டி.கே.எஸ். இளங்கோவனும் அக்கட்சியின் மூத்த தலைவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்ககூடும் என்று திமுகவில் பேசப்படுகிறது.
சிதம்பரம் கைப்பற்றுவாரா?

இதேபோல அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம் ராஜினாமாவால் ஏற்பட்ட காலி இடத்தில் நிறுத்தப்பட்ட கனிமொழி சோமு திமுக சார்பில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது 10 மாதங்கள் மட்டுமே எம்.பி.யாக இருப்பார் என்பதால், அவருக்கு மீண்டும் ஆறு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தற்போது மகாராஷ்டிராவிலிருந்து காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். அவருடைய பதவிக் காலம் ஜூனில் முடிகிறது. இந்த முறை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கே நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. எனவே, அவர் தமிழகத்திலிருந்து எம்.பி.யாகும் பணிகளைத் தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ப.சிதம்பரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
அதிமுகவுக்கு 2 எம்.பி.

மேலும் தேனியைச் சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோரும் எம்.பி. பதவிக்கான ரேஸில் இருப்பார்கள் என்றும் கருதலாம். இவர்கள் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பலம் வாய்ந்த ஓபிஎஸ், எஸ்.பி. வேலுமணியை எதிர்த்து களமிறங்கப்பட்டு தோல்வி அடைந்தனர். அந்த அடிப்படையில் இவர்கள் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம். அதிமுகவிலிருந்து நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. புதிதாக இரண்டு பேர் தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம். அந்த இரு பதவிகளைப் பிடிக்க அதிமுகவில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.
