The tense situation was caused by the attempts to burn the image of Tamil Nadu BJP leader Tatasila Chaudhirajan.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் உருவபொம்மையை எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது.
தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருமாவளவனை விமர்சித்த தமிழிசையை கண்டித்து விசி கட்சி போராட்டம் நடத்தியது. மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர்.
கருத்து உரிமையை பாஜக பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கமிட்டனர். மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க சொன்ன தமிழிசை சவுந்திரராஜனின் உருவபொம்மையை எரிக்க முயற்சி மேற்கொண்டனர்.
