Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அரசின் ஆட்சியாளர்களின் சுயநலத்தால் திருக்கோயில்கள் சீரழிகின்றன - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

The temples are ruined
 The temples are ruined
Author
First Published Aug 16, 2017, 5:44 PM IST


அதிமுக அரசின் ஆட்சியாளர்கள், தங்களின் சுயநலத்துக்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு, அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருக்கோயில்களைச் சீரழித்துக் கொண்டிருப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் அலட்சியமான செயல்களால் கோயில்கள் சிதைக்கப்படுகின்றன என வரலாற்று ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோ அமைப்பிடம் உயர்நீதிமன்றம் கூறியது.

இதன் காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில், கும்பகோணம் நாகேசுவரன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

அறநிலையத்துறையிடம் கோயில் திருப்பணிகளுக்கான விதிமுறைகள், வரைபடங்கள், திட்ட அறிக்கைகள் எதுவுமே முறையாக இல்லை. அவை குறித்து விளக்கவும், ஆலோசனை அளிக்கவும் தகுதியானவர்கள் இல்லை.

பழங்கால சிற்பங்களின் தன்மையையும், பெருமையையும் அவற்றைச் சீரமைக்கும் முறைகளை அறிந்த சிற்பிகள் - ஸ்தபதிகள் யாரையும் அறநிலையத்துறை அணுகுவதில்லை.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் மயிலாப்பூர் கோயில் குளம் முறையாக தூர்வாரப்பட்டது. திருவாரூர் கோயிலின் ஆழித்தேர் பழமைத்தன்மை மாறாமல் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. குமரி முனையில் 133 அடியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு உயர்ந்து நிற்கிறது.

அதிமுக அரசின் ஆட்சியாளர்களோ தங்களின் சுயநலத்துக்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு அறநிலையத்துறையின் அலட்சியத்தால் திருக்கோயில்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அவலத்தைத்தான் யுனெஸ்கோ தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதிமுக அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டு சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios