நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த சகாயம் ஐஏஎஸ்-க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகளை வழங்கவில்லை. தமிழ் நாடு அறிவியல் நகர தலைவராக டம்மி பதவியில் அவரை நியமித்திருந்தது. இதனால், சகாயம் ஐ.ஏ.எஸ். கடும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில், ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து விருப்ப ஓய்வு கோரி சகாயம் விண்ணப்பித்தார். இந்நிலையில் அவரை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “நான் வருத்தத்தில் உள்ளேன். நேர்மையாக செயல்பட்ட என்னை ஏன் விருப்ப ஓய்வு பெறுகிறீர்கள் என்றுகூட நேரில் அழைத்து அரசு பேசவில்லை. அக்டோபர் 2 அன்று காந்தி பிறந்த நாளில் விருப்ப ஓய்வு பெறக் கோரி விண்ணப்பித்தேன். அப்போது ஒரு கோரிக்கையை தமிழக அரசிடம் வைத்தேன். காந்தி மறைந்த தினமான ஜனவரி 31 அன்று விருப்ப ஓய்வு அளிக்கும்படி  கோரிக்கை விடுத்திருந்தேன். இந்தக் கோரிக்கையைகூட தமிழக அரசு நிராகரித்துவிட்டது. அதற்கு முன்பாகவே விடுவித்துவிட்டது” என்று சகாயம் தெரிவித்துள்ளார்.