உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை மற்றும் ஐந்துபேரின் தண்டனை குறைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கவுசல்யா தம்பதியினருக்கு கௌசல்யா பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ள நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கௌசல்யா உயிர்தப்பினார். இதுதொடர்பாக வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஜூன் 22ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வகையில் தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை எனவும், இதனால் குற்றவாளிகள் தப்பித்து விடுவதோடு மேலும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். 

எனவே தமிழக அரசு தாமதமில்லாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், உரிய வாதங்களை எடுத்து வைத்து,குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் இந்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.