The system is fine! Seloor Raju pressmeet

ஒரு இயக்கத்தை நடத்துவது என்பது கட்சி தொடங்கிய பிறகுதான் ரஜினிக்கு தெரியும் என்றும், ரஜினி அரசியல் களத்திற்கு வருவதையே நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், இதனை தான் வரவேற்பதாகவும் கூறினார்.

ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்றும் எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறினால் அதனை சரிசெய்து கொள்வோம் என்றார். ஒரு இயக்கத்தை நடத்துவது என்பது கட்சி தொடங்கிய பிறகுதான் ரஜினிக்கு தெரியும் என்று கூறிய செல்லூர் ராஜு, ரஜினி களத்திற்கு வருவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எங்களுடைய பணி வழிநடத்தப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் நாங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்றும் கூறினார்.