தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெய்சுக்கின் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதம் செய்யப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக் கூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றி 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.