குக்கருக்கும் தினகரனுக்கும் அப்படி என்னதான் பாசிடீவ் ராசியோ தெரியவில்லை. இருவரும் இணைந்தால் எகிடுதகிடாக தொடர்ந்து ஹிட்டடிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ எனும் பெயரில் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடானது. அப்போது ஆளும் அணியின் சார்பாக போட்டியிட்ட தினகரனுக்கு ‘தொப்பி’ சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணையம். ஆனால் அந்த தேர்தல் ரத்தானது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் அந்த இடைத்தேர்தல் நடத்தப்பட ஆயத்தமானபோது காட்சிகள் மாறியிருந்தன. பன்னீர்செல்வம், ‘தர்மயுத்தம்’ போர்டை கழட்டிவைத்துவிட்டு பழனிசாமியின் ஆட்சியில் பார்ட்னராகிவிட்டார். இருவரும் சேர்ந்து கழட்டிவிட்ட தினகரன் சுயேட்சையாக களமிறங்கினார்.

அவர் தனது பழைய ‘தொப்பி’ சின்னத்தை கோரியபோது, எதிர்பாராதவிதமாக ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடானது. ஆனாலும் தினா அசரவில்லை வழக்கம்போல். ஏதோ பெண் வேட்பாளர் போல் தினகரன் குக்கரை தூக்கிக் கொண்டு களமாடியதை கன்னாபின்னாவென கிண்டலடித்தனர் ஆளும் அணியினர்.

இந்நிலையில அந்த இடைட்தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டையும் நய்யப்புடைத்து விரட்டிவிட்டு தாறுமாறாக வெற்றி பெற்றார் தினகரன். ’எங்கள் தலைவன் வைத்த குக்கரில் இலை கருகியது, சூரியன்  வெந்து மறைந்தது, தாமரை அவிந்தது!’ என்று நாஞ்சில் சம்பத் ச்சும்மா கலா மாஸ்டர் ரேஞ்சுக்கு கிழி! கிழி! என கிழித்தார் மேடைதோறும்.

இந்நிலையில் இரட்டை இலை! சின்னம் தனக்கு கிடைக்காத நிலையில், தனது வெற்றிச் சின்னமான குக்கரை தனது தேர்தல் சின்னமாக தொடர்ந்து வழங்கிட தினகரன் கோரினார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்த்திருந்தார்.

இன்று இதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குக்கர் சின்னத்தை தினகரன் கட்சிக்கு ஒதுக்குமாரு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சியையே தோற்கடித்து, தன்னை எம்.எல்.ஏ.வாக்கிய சென்டிமெண்டான குக்கர் சின்னம் தன் கைக்கு வந்திருப்பதை எண்ணி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போயிருக்கும் தினகரன் அடுத்து தனி கட்சிக்கான ஆலோசனையில் குதித்துவிட்டார்.

இந்நிலையில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.இது தனக்கு சாதகமாகதான் வருமென அவர் நம்புகிறார். நேற்று வேலூரில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கும் துரைமுருகன் கூட அந்த தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாகவே வரும்! என்று கூறியுள்ளார். கூடவே அப்படி வரும் பட்சத்தில் தானாக ஆட்சி கலையும் சூழல் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார் துரை.

குக்கர் சின்னம் தன் கைக்கு வந்தது, 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பும் சாதகமாக வரும் எனும் நம்பிக்கை ஆகியவற்றால் செம்ம ஹேப்பி மூடிலிருக்கும் தினா ‘நம்மோட அடுத்த வெற்றி ஆட்சி கலைப்புதான். அதுவும் இன்னும் சில வாரங்கள்ளேயே கூட நடந்தாலும் நடக்கும்.!’ என்று சொல்லி ஸ்வீட் எடுத்து கொண்டாடியிருக்கிறார்.

இந்நிலையில் தினாவுக்கு அவரது வெற்றிச் சின்னமான குக்கர் ஒதுக்கப்பட்டிருப்பதில் அ.தி.மு.க.வின் ஆளுமைகள் செம அப்செட். இந்த சின்னம் இந்தாளு கைக்கு வந்தால் ஏகப்பட்ட சக்ஸஸை அனுபவிப்பாரே! என்று நொதுள்ளார்கள்.

உலகத்திலேயே சுயேட்சை சின்னத்தை பார்த்து பயந்து, பொறாமை கொள்ளும் ஒரே ஆளுங்கட்சி அ.தி.மு.க.தான் என்பதை நினைவில் கொள்க!