நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காலை 6 முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, வரும் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜன., 26ல் வெளியானது. அப்போதே, கொரோனா பரவல் காரணமாக, பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் விதித்தது.
உள் அரங்கில் பிரசாரம் செய்யவும், வேட்பாளருடன் மூன்று பேர் மட்டுமே வீடுதோறும் சென்று பிரசாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. சமீபத்தில், பிரசாரத்தில் சில தளர்வுகளை மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி, திறந்த வெளியில் 1,000 பேர் வரை பங்கேற்கும் வகையிலான பிரசாரத்தை மேற்கொள்ளலாம்; 20 பேர் வரை வீடுதோறும் சென்று ஓட்டு சேகரிக்கலாம். கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பிரசாரத்தில் கூடுதல் தளர்வுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, வரும் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இரவு 8:00 முதல் காலை 8:00 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது அந்த உத்தரவு மாற்றப்பட்டு, காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்திற்காக கலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி, ஊர்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அதற்கும் தளர்வு அளிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று, இது போன்ற பிரசாரங்களை மேற்கொள்ளலாம். இதற்கு உரிய அனுமதியை, மாவட்டங்களில் கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் வழங்குவர்.
அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களை, மாவட்ட கலெக்டர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாவட்ட கலெக்டரின் ஒப்புதலை பெற்று பிரசாரம் செய்ய வேண்டும்.பிரசாரத்தின் போது, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
