ஊரடங்கை மீறி கடந்த ஜூலை 7ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிக்க சமூக நலத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக மார்ச்16ந் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது, சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு தினமும் இஞ்சி,, பூண்டு, மிளகு உணவில் சேர்க்கப்பட்டு தினமும் முட்டை வழங்குவதன் மூலமாக புரதசத்து வைட்டமின் சத்துகள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இன்று விடுமுறையின் காரணமாக மதிய உணவு கிடைக்காத பட்சத்தில் சத்து குறைவான குழந்தைகளாக உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் சத்துணவு சமைத்து வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிட்டால் சத்துணவு ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியோடு சத்துணவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக சத்துணவு மற்றும் சமூக நல ஆணையாளர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. 

 

சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு பணமாக வங்கியின் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் அனுப்புவதற்கு அரசாங்கம் துரிதமாக செயல்பட்டது. இதனை தவிர்த்திடவும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் 7-7-2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஜனநாயக முறைப்படி சமூக இடைவெளி யோடு முககவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது ஏழை, எளிய குழந்தைகளுக்கு தமிழக அரசு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் குழந்தைகளின் நலனை கருதி ஆர்ப்பாட்டம் விடுமுறை தினத்தில் நடைபெற்றது இது எந்தவிதத்தில் தவறு. 

தற்பொழுது அனைத்து துறைவாரி சங்கங்களும் தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழ்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் ஒருநாள் ஊதியத்தை பிடிக்க வேண்டுமென்று ஆணையாளரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக பூர்வமாக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதை அறிந்தும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் என்பது ஊழியர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதியப்பிடித்த ஆணையை ஆணையாளர் அவர்கள் திரும்பப்பெற வேண்டும். 

மேலும் சமுக நலத்துறை அமைச்சர் அவர்கள் பத்திரிகை செய்தியில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்குவதாக தவறுதலாக தெரிவித்து (அரிசி, பருப்பு மட்டும் வழங்க உத்திரவு வழங்கி விட்டு எண்ணெய் வழங்குவதாக) இருப்பது மக்கள் மத்தியில் சத்துணவு ஊழியர்களுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சத்துணவு ஊழியர்களின் சார்பாக கண்டனதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் அதுவும் விடுமுறை காலத்திலும் வேலைநேரம் முடிந்தபின்  ஆர்ப்பாட்டம் நடத்தினால் ஊதியப் பிடித்தம் செய்வதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். இல்லை யெனில் அடுத்தகட்ட இயக்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்ப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.