அதிமுக, பாஜக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மக்கள் துயரத்தில் இருந்தபோது நிவாரணம் வழங்காமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு பொங்கல்பரிசு என்ற பெயரில் ரூ.2500 வழங்குகின்றனர். தேர்தலை மனதில் வைத்து தான் இந்த தொகை வழங்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். இதைக்கொண்டு தேர்தல் ஆதாயம் பெறலாம் என நினைக்கின்றனர்.

இப்படியெல்லாம் அரசுப் பணத்தை வாரி வழங்கி மூழ்கிக்கொண்டிருக்கும் அதிமுக எனும் கப்பலை தூக்கிநிறுத்திவிடலாம் என்று கனவு கண்டால் அதுபலிக்காது. மக்கள் இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள் விவரமானவர்கள். அதிமுக, பாஜக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் இல்லை. 

விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு இரண்டு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சனையை உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்கள் நீடிக்க விரும்புகிறதா. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு தவணை வாங்கித்தருவதாக உள்ளது என குற்றம்சாட்டினார்.மழையால் கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.