ஜெயலலிதா அளித்த அடையாளமே எனக்கு போதும் எனவும் ஆதாயம் தேடுபவர்களே அணியை தேடுவார்கள் எனவும் நடிகையும் அதிமுக பேச்சாளருமான விந்தியா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா காலத்தில் சிறந்த அதிமுக பேச்சாளராக திகழ்ந்தவர் நடிகை விந்தியா.

இவர் ஜெயலலிதா மேல் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டவர். விந்தியாவுக்கு சொந்தமான மாம்பழ தோட்டம் ஒன்று திருப்பதியில் உள்ளது.

அங்கு விளையும் மாம்பழங்களை ஆண்டுதோறும் ஜெயலலிதாவுக்கு கொண்டு வந்து கொடுக்கும் அளவுக்கு நெருக்கமாகவும் பாசமாகவும் பழகியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் தலையிடமால் ஒதுங்கியே இருந்தார் விந்தியா. அதிமுக இரண்டு அணியாக பிளவுற்ற போது அதிமுகவினரும் இரு தரப்பாக பிரிந்தனர்.

ஆனால் நடிகை விந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இவர் கருதுகிறார் என தெரிகிறது.

இந்நிலையில், இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற விந்தியா தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை வைத்து வினோதமான முறையில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை விந்தியா ஜெயலலிதா அளித்த அடையாளமே எனக்கு போதும் எனவும், ஆதாயம் தேடுபவர்களே அணியை தேடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், கட்சியை காப்பாற்றவும் இருஅணிகள் இணைவதில் தவறில்லை எனவும் அவர் குறிபிட்டார்.