11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்கியதோடு 5000ரூபாய் வழங்கி உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் உள்ள பழங்காநத்தம் பகுதியில் உள்ள மந்தைத் திடலில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் K ராஜு தலைமையில்  தெருமுனை பிரச்சார  பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:

 

இன்றைக்கு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பஸ்பாஸ், கிரையான்ஸ், நோட்டுபுத்தகங்கள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களோடு சத்துணவும் வழங்கி மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும் என்ற அளவிற்கு இலவசங்களை வழங்கி கொண்டு இருக்கிறார். தமிழக அரசு, குறிப்பாக 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள், லேப்டாப் வழங்கியதோடு 5000ரூபாய் வழங்கி உயர்கல்வி கற்க ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. இதற்காகவா...! அதிமுக ஆட்சியை நிராகரிக்க வேண்டும் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

எம்ஜிஆர் ஆட்சியின் போது எம்ஜியாரை திட்டினார்கள், ஜெயலலிதா ஆட்சியின் போது பொய் வழக்கில் சிறை அனுப்பி திட்டினர், ஆனால் அவர்கள் மறைவிற்கு பிறகு, தற்போதும் அவர்களின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின் உட்பட திமுகவினர் யாரும் கலைஞர் ஆட்சி  வேண்டும் என்று கேட்பதில்லை.  

இன்றைக்கு அழகிரியிடம் இருந்த ரவுடிகள் தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்துள்ளார்கள். ரவுடிகளுக்கு  துணை தேவைப்படுகிறது. அதிமுகவில் ரவுடிகளை கிட்டவே சேர்ப்பதில்லை, எங்களுக்கு ரவுடிகளே பிடிக்காது. செம்பை கொடுத்து அண்டாவை திருடிய கதையாக, திமுக ஆட்சியில் 2500 ரூபாய் மதிப்புள்ள டிவியை கொடுத்துவிட்டு, ஆண்டுக்கு 1200 ரூபாய் வீதம் கேபிள் கானெக்சனில் மக்களை ஏமாற்றினர். இவ்வாறு பேசினார்.