தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார். அதோபேல் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான ஆட்சி தொடரும்  என நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளளார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். 

விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்து அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச இயலாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது, தமிழகத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு  தமிழர்கள் செய்த தியாகம் போற்றுதலுக்குரியது. 

நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது, மோடி தலைமையிலான அரசு கொரோனாவை எதிர்த்துப் சிறப்பாக போராடிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை எதிர்த்து அரசு மட்டும் போராடவில்லை 130 கோடி மக்களும் போராடுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக முதல்வர் துணை முதல்வர் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை போன்று வேறு எங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.கொரோனாவை எதிர்கொள்வதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கொரோனா தடுப்பில்  மட்டுமல்ல நிர்வாக  திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம் வகிக்கிறது.உடல் நலக் குறியீட்டில் மாவட்டங்கள் இடையே  வேலூர், கரூர் மாவட்டங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் வேலூர், கரூர் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொரோனாவை அறிவியல் பூர்வமாக அணுகி அதை கட்டுப்படுத்தியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாட்டிற்கே தமிழகம் முன்னோடியாக உள்ளது. 

நாடு முழுவதும் விவசாயிகளை  கட்டுப்படுத்தி வந்த இடைத்தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஏழை மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு, கிராமங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இது செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களிலும் போட்டி என்று ஒன்று வைத்தால் தமிழ்நாடே முன்னிலை வகிக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டம்  நிறைவேறும், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதுவரை 95 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு செலுத்தியுள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு 4,400 கோடி நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 

நீலப்புரட்சி என்று சொல்லக்கூடிய ப்ளூ ரெவல்யூஸனில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகிறது இதில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது விரைவில் முதலடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழக மக்களின் வளர்ச்சியில் என்றும் மத்திய அரசு துணை நிற்கும் என்பதை உறுதியாக சொல்லுகிறேன்.