Asianet News Tamil

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை... வெற்றிநடைபோடும் அதிமுக ஆதரவாளர்கள்... கொந்தளிக்கும் திமுக விசுவாசிகள்..!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றிச் செயல்பட முயன்று கொண்டிருக்கையில் அதிமுக வகுத்த பாதையிலேயே இன்னமும் "வெற்றிநடை" போட்டுக்கொண்டிருக்கிறது செய்தித் துறை அமைச்சகம் மட்டும்!
 

The regime change scene has not changed ... AIADMK supporters on the verge of victory ... DMK loyalists in turmoil ..!
Author
Tamil Nadu, First Published Jun 22, 2021, 6:42 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றிச் செயல்பட முயன்று கொண்டிருக்கையில் அதிமுக வகுத்த பாதையிலேயே இன்னமும் "வெற்றிநடை" போட்டுக்கொண்டிருக்கிறது செய்தித் துறை அமைச்சகம் மட்டும்!

செய்தி - மக்கள்தொடர்புத் துறையிலுள்ள பெரும்பாலான அலுவலர்கள் உறுதியாக திமுக அல்லது அதிமுக ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள். இந்தத் துறை தோற்றுவிக்கப்பட்டதே இயக்க ஆதரவாளர்களை நேரடியாக அரசுப் பணிக்கு எடுத்துக்கொள்வதற்காகத்தான். கட்சி சார்பற்ற அதிகாரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இங்கேயும் ஆட்சி மாறும்போது அவர்களுக்கேற்ப அதிகாரிகளும் மாறுவார்கள். அனேகமாக மாவட்ட செய்தி - மக்கள்தொடர்பு அலுவலர் வரையிலும் மாற்றங்கள் இருக்கும்.

ஆனால், மிகச் சிறப்பான முறையில் மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான இந்த காலகட்டத்தில் இன்னமும் இந்தத் துறை முழுவதும் ஆட்சி மாறியும் காட்சி மாறாமல் அதிமுகவின் அடிவருடிகள் அப்படியே தொடருகிறார்கள். அதிமுக ஆட்சியின் கடைசி நாள் வரையிலும் இந்தத் துறையை விரல் நுனியில் வைத்துக்கொண்டு செல்வாக்காகத் திகழ்ந்தவர் எஸ்.பி.எழிலழகன்! எடப்பாடியின் ஆதரவாளராக எக்ஸ்டென்ஷனிலேயே கடைசி எட்டு ஆண்டுகள் சிறப்புப் பணி அலுவலராக இருந்தவர் இவர்.

இவருடைய உபயத்தாலும், யுக்தியாலும்தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக ஆதரவாளர்களென அறியப்பட்ட செய்தித் துறையினர் எல்லாம் 'தண்ணியில்லா' இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்தனர். ஒரு ஆண்டு, இரு ஆண்டுகள் அல்ல, பத்து ஆண்டுகள்... தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், கேபிள் டிவி இருட்டடிப்பு போன்றவற்றைச் சொல்லி இந்த எழிலழகன் பெயரைக் குறிப்பிட்டே தேர்தல் முடியட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று எச்சரித்தார் என்றால் இவருடைய "சிறப்பைப்" பார்த்துக்கொள்ளலாம். ஆட்சி மாறி, எழில் வெளியேறிவிட்டாலும்கூட, துறை என்னவோ இன்னமும் அவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதைப் போலதான் தொடருகிறது என்பது திமுக ஆதரவாளர்களின் குமுறல்.

இன்னமும் உறக்கத்தில் இருக்கும் செய்தித் துறையில் இதுவரை மிகச் சில   மாற்றங்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் இயக்குநராக இருந்த அம்பலவாணன் என்பவர் தலைமைச் செயலகத்தில் கூடுதல் இயக்குநர்  (செய்தி) ஆக இடம் பிடித்திருக்கிறார். திமுக ஆதரவாளர் என்பதற்காக ஊர்ஊராகத் தூக்கியடிக்கப்பட்ட மாறன் என்பவர், முதல்வரின் செய்தித் தொடர்பு அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், பிரபுகுமார் என்பவர் உதவி இயக்குநராகவும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரு சர்ச்சைக்குப் பின்னர், திருச்சி மாவட்டத்திற்கு செந்தில்குமார் என்பவர் மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியின் மக்கள்தொடர்புக்கு மகேஷ்வரன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். துறையின் அமைச்சரான மு.பெ. சாமிநாதனின் சொந்த மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் ஒரு உதவி மக்கள்தொடர்பு அதிகாரி வந்திருக்கிறார், இவர்கூட  அதிமுக ஆதரவாளர்தானாம்! இதில் அம்பலவாணன் விஷயம்தான் ஹைலைட்.

திமுக ஆதரவாளராகப் பணிக்கு வந்தவர்தான் இவர். 1996-2001-ல் அமைச்சர் துரைமுருகனுக்கு பி.ஏ.வாக இருந்த இவரை என்ன காரணத்தாலோ அமைச்சர் கழற்றிவிட்டுவிட்டிருக்கிறார். 2006 - 2011 காலகட்டத்தில் செய்திப் பிரிவு அலுவலகத்தில் இருந்த இவரை நம்பிக்கைக்குரியவர் அல்ல என்பதற்காகவே  கழற்றியிருக்கின்றனர். திமுக ஆதரவாளர்கள் எல்லாம் அல்லாடிக்கொண்டிருந்தபோது, பதவி உயர்வு மறுக்கப்பட்ட அல்லது தாமதப்படுத்தப்பட்ட நிலையில், எழிலின் ஆசிர்வாதத்தில் கூடுதல் இயக்குநராகப் பதவி உயர்வும் பெற்றவர் இந்த அம்பலவாணன்.

 உடனே, 2019 நவம்பர் 28 ஆம் தேதி, முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்தும் பெற்ற இவர், மிகக் கவனமாக அந்தப் புகைப்படம் வெளிவராமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். பிரமோஷன் ஆர்டர் வருமுன்னரே போனில் அழைத்து இவருக்கு வாழ்த்துச் சொன்னாராம் எழில்! என்னடா கூத்து என்றால், அந்த அம்பலவாணன்தான், திமுக ஆதரவாளர் என்ற பழைய "டேக்"கில் யார் மூலமாகவோ தற்போது தலைமைச் செயலகத்தில் வெற்றிகரமாக இடம்பிடித்துவிட்டார். நிறம் மாறுவதெல்லாம் சாதாரணமப்பா என்றாலும் தீவிரமான திமுக ஆதரவாளர்கள் யாரும் துறைக்குள் - தலைமைச் செயலகத்துக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காக இவர் செய்கிற தகிடுதத்தங்கள்தான் பலபேரைக் கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

யாரெல்லாம் முக்கியமானவர்கள் எனக் கருதப்படுகிறார்களோ அவர்களை  எப்படி வெட்டிவிடுவது என்பதில் கண்ணுங்கருத்துமாக, அவர்களைப் பற்றித் தவறான பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறாராம் இவர். அதிமுக ஆட்சியில்தான் பத்து ஆண்டுகளாக வனவாசம் போல அலைந்து திரிந்தோம். ஆட்சி மாறியும் அந்த கும்பலே இருந்துகொண்டு இப்போதும் அநியாயம் பண்றாங்களே என்பதுதான் திமுக ஆதரவாளர்களின் புலம்பல்.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த இரு நாள்களும், நடப்பது நடக்கட்டும் என்று அங்கேயே கிடந்தனர் திமுக ஆதரவாளர்களான எத்தனையோ செய்தித் துறை அதிகாரிகள். ஆனால், அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்காத அடிமை விசுவாசிதான் இந்த அம்பலவாணன். ஆனால், இப்போது அவர்தான் எல்லாமும் மாதிரி செயல்பட யார் அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.


இந்தத் துறையின் அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனோ, தன்னுடைய கட்சிக்காரர்கள் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படாமல், அதிமுக ஆட்சியில் கோலோச்சிய அதிகாரிகளுடன்தான் மணிக்கணக்கில் ஆலோசனை நடத்துகிறாராம். எல்லாமும் ஊர்ப் பாசம், சொந்த சமுதாயப் பாசம் என்கிறார்கள். கலைஞர் பிறந்த நாளில் அவருடைய நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கே அதிமுக ஆதரவு அதிகாரிகளுடன் செல்லும் நிலையில்தான் இருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதெல்லாம் முதல்வருக்குத் தெரியுமா, யாரிடம்தான் போய்ச் சொல்வது, அதிமுக ஆட்சிக் காலத்தில் பழிவாங்கப்பட்ட இறையன்பு போன்ற எத்தனையோ அதிகாரிகளுக்கு ஒரு விடிவு பிறந்துவிட்டது. மிக முக்கியமான பணிகளைச் செய்ய வேண்டிய ஒரு துறையில் எந்த மாற்றமுமில்லாமல் இன்னமும் அதிமுக கொடி பறக்கிறதே என நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios