அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்றும், டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கியது சசிகலா செய்த முதல் தவறு என்று திவாகரன் கூறியுள்ளார்.

அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை வரவேற்கிறேன். அதிமுகவின் குழப்பமான நிலைக்கு சசிகலாதான் காரணம். திறமை வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்திருந்தால் இதுபோன்ற பிரச்சனை வந்திருக்காது.

தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தது தவறானது. தினகரன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்க்கிறார். அமமுகவை கவனிக்காமல் அதிமுகவுடன் தினகரன் மோதல் போக்கில் ஈடுபடுவது சரியான செயல் அல்ல. இடைத்தேர்தலை நேரடியாக சந்திக்க வேண்டுமே தவிர பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தக்கூடாது. முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்துதந்த பாதையில் பயணிப்பவர்களுக்கு எங்கள் கட்சி நல்லதொரு கூடாரமாக திகழும்.

நான் அதிமுகவில் இணைய மாட்டேன். அதில் நான் பங்கு கோரவில்லை. அவர்களே பல்வேறு நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். நாம் ஏன் தொந்தரவு தரவேண்டும். நாங்கள் தனி இயக்கம் கொண்டிருக்கிறோம். எங்களிடம் நல்லவர்கள் 2 பேர் இருந்தால்கூட போதும் என்று திவாகரன் கூறினார்.