பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்ப வருமோ? எப்படி வருமோ! என்று தமிழக அரசியலரங்கம் கன்னத்தில் கை வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எடப்பாடி அணியிலிருந்து எம்.எல்.ஏ. ஒருவரை அழுங்காமல் உருவியிருக்கிறார் டி.டி.வி. ’மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்களாடா பஞ்சாயத்தை!’ என்று தெறித்துக் கிடக்கிறது எடப்பாடி அணி. 

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால்தான் பதினெட்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு போக, அதில் வரும் தீர்ப்பு தமிழக அரசையே காவு வாங்கினாலும் ஆச்சரியமில்லை! என்று பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மேலுமொரு எம்.எல்.ஏ. தினகரன் பக்கம் சாய்ந்திருப்பது தினாவின் அரசியல் சாணக்கியத்தனத்தை கண்டு ஆளும் அணியை அசரவைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபு. இத்தனை நாட்கள் வரை எடப்பாடியின் ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் இப்போது தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

அண்ணனை சந்தித்து ஆதரவு வழங்கினேன்! எனும் பஞ்ச் டயலாக்கோடு வெளியே வந்தவர் கூடி நின்ன மீடியாவிடம் “தலைவர் டிடிவிக்குதான் மக்கள் ஆதரவு இருக்குது. மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள், தேவைகள் இருக்குது. ஆனால் அரசாங்கத்தின் கவனத்துக்கு பல முறை சொலியும் எதுவுமே தீரலை. இதனால அண்ணனின் சேவை நாட்டுக்கு தேவை! அவரு ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சுபிட்சமாகிடும். 

இப்போதைக்கு நான் வந்திருக்கேன், கூடிய சீக்கிரம் இன்னும் பலர் வருவாங்க.” என்று போகிற போக்கில் எக்ஸ்ட்ரா பிட்டுகள் ரெண்டையும் போட்டுவிட்டு போய்விட்டார். 

பிரபுவின் இந்த அதிரடி ஜம்பினால் கடுப்பாகி விட்டது எடப்பாடி தரப்பு. காரணம், இது மோடி தமிழகத்துக்கு விசிட் வரும் நேரம். ஏற்கனவே ‘பிரதமர் சொல்லித்தான் எடப்பாடியுடன் இணைந்தேன், முதலமைச்சர் பதவி வாங்கினேன்.’ என்று பன்னீர் கொளுத்திப் போட்ட பஞ்சாயத்துக்கே என்ன விளக்கம் சொல்லப்போறோமோ! என்று பழனிசாமி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் அணி மேலும் ஒரு எம்.எல்.ஏ.வை இழந்திருப்பது அவரை தர்ம சங்கடத்தில அழ்த்தியுள்ளது.
பிரதமர் தமிழகம் வரும் வேளையில், அவரது கட்டுப்பாட்டிலிருப்பதாக விமர்சிக்கப்படும் ஆட்சியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.வை தினா உருவியிருப்பது பிரதமருக்கே அவர் விட்ட சவாலாகத்தான் பார்க்கப்படுகிறது! ’நீங்க எத்தனை வழக்கு, கைது, சம்மன்னு பயங்காட்டினாலும், நான் அசரமாட்டேன்.’ என்று எகத்தாளமாய் சவால் விட்டிருக்கிறார் தினகரன் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.