அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் துவங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மாற்றம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதெல்லாம் இல்லை இதுதான் காரணம் இதற்காகத்தான் இந்த கூட்டம் என்கின்றனர் விபரமறிந்த சிலர்.


அது என்ன?....


சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. அதில் பிரதானமான சிக்கல் அவர் நேரிடியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட முடியாததே. அதிமுக கட்சி பைலா பிராகாரம் 5 ஆண்டுகாலம் அதிமுகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது விதி.


ஆனால் சசிகலா 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இல்லாததால் சில விதிகளை மாற்றி பொதுக்குழுவில் சில மாற்றங்களுடன் சட்டசிக்கல்கள் பின்னர் சரி செய்யப்படும் என்ற அறிவிப்புடன் பொதுச்செயலாளராக்கினார்கள்.


இதை எதிர்த்து சசிகலா புஷ்பா , முன்னாள் எம்.பி.கே.சி.ப்ழனிச்சாமி போன்றோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழ்ங்கியுள்ளது. 


ஆகவே தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் விவகாரம் தொடர்பாகவே இன்றை கூட்டம் இருக்கும் என்று கூறுகின்றனர்.


 கடந்தவாரம் டெல்லி சென்றுவந்த நடராஜன் பொதுச்செயலாளர் பதவி தேர்வு முறையில் சில குறைகள் இருப்பதை சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்வது என சட்ட ஆலோசகர்களுடன் பேசி வழிமுறைகளை கேட்டறிந்தார்.


 அதன் அடிப்படையில் அதிமுக பைலாவில் சில ஷரத்துக்களை மாற்றி மீண்டும் தேர்வு நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான சில முன்னறிவிப்புகள் மற்றும் கட்சி கட்டுப்பாடு போன்றவைகள் குறித்து அறிவுறுத்தவே இந்த கூட்டம் என்கிறார்கள்.


பொதுக்குழு கூட்டத்தின் போது எம்.எல்.ஏக்களில் பலர் தங்களது கையொப்பத்தை மாற்றி போட்டுள்ளார்கள், அதை சுட்டிக்காட்டி அவர்களை அன்பாக ? எச்சரித்து மீண்டும் இன்று கையெழுத்து பெறப்படும் என்றும் தகவலும் வெளியாகி உள்ளது.


மேலும் ஆர்.கே.நகரில் தீபாவுக்கு கூடிய கூட்டம் கார்டனை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது, ஆகவே தீபா பக்கம் யாரும் போகக்கூடாது, கட்சி ஜெயலலிதா சொன்ன பாதையில் பயணிக்கும் யாரும் கவலைப்படவேண்டியதில்லை , எல்லோருக்கும் வேண்டியது நடக்கும் என்று சொல்லப்போகிறார்கள் என்கிறார் ஒரு தலைவர்.


 சவால்களையும் சந்திப்போம், வெல்வோம் 4.5 ஆண்டுகால நல்லாட்சியை தொடர்வோம் என்பதே இந்த கூட்டத்தின் சூளுரை என தகவல். மற்றொரு புறம் பன்னீர் செல்வத்திற்கும் , திமுக , பாஜக தலைமைக்கும் கட்சி எங்கள் கையில் தான் என்பதை எச்சரிக்கும் விதமாகத்தான் இந்த கூட்டம் இருக்குமே தவிர ஓபிஎஸ் மாற்றம் எல்லாம் இல்லை என்கின்றனர்.