இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும். கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 

12-1-2021 தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலிர தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும். மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்,  ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

13-1-2021 தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைய்மெ,  ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 

14-1-2021 மற்றும் 15-1-2021 தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. ஜனவரி 11 ஜனவரி 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி 12,13 ஆகிய தேதிகளில் கேரளா கடலோரப் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.