திமுக சார்பாக ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு; டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதியை திமுக நிராகரித்தது ஏன்?
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், டி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதியை நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 பேர் பதவி காலம் முடிவடைகிறது
நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்திநிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது இந்தநிலையில் அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திரு. தஞ்சை சு. கல்யாணசுந்தரம், .திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், திரு. இரா. கிரிராஜன், ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி காலமும் முடிவடைய உள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிடும் 3 பேரில் ராஜேஸ்குமாருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைத்தியலிங்கம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட ராஜேஸ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வருடம் மட்டும் மாநிலங்களவை உறுப்பினராக ராஜேஸ்குமார் பணியாற்றியதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாய்ப்பு மறுப்பு ஏன்?
அதே நேரத்தில் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. டி.கே. எஸ்.இளங்கோவன் வட சென்னை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு ஏற்கனவே வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேர்தலில் டிகேஎஸ் இளங்கோவனுக்கு திமுக சார்பாக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் டி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் திமுக அமைப்பு செயலாளராக உள்ள ஆர்.எஸ்.பாரதி மூத்த வழக்கறிஞராகவும் உள்ளார். திமுக சார்பாக பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.பாரதிக்கு திமுக சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் அதிரடி கருத்து காரணமாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பத்திரிக்கையாளர்கள் தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் தொடர்பாகவும் இவர் விமர்சித்த கருத்துகள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மாநிலங்களவை தேர்தலில் இதன் காரணமாக மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு