பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- இந்த தேர்தலானது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிரிலுள்ள ஊழல் கூட்டணியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நான் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சொல்லியாக வேண்டும். அவர் மக்களின் உண்மையான தலைவராக விளங்கியவர். ஏழை மக்களுக்காக பணியாற்றியவர்கள் என நாடு முழுவதும் ஒருவருக்கு பெருமையை கொடுக்க வேண்டும் என்றால் அது எம்.ஜி.ஆரையே சாரும். 

மேலும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் பின்தொடர்ந்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார். ஜெயலலிதா, ஒரு பெண்மணியாக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். தற்போது பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்பேரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் சிறப்பாக எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில்கூட  திமுகவை சேர்ந்த ஆ.ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று தரக்குறைவான வார்த்தைகளை திமுகவினர் பேசி வருகிறார்கள். ஏற்கனவே முந்தைய காலங்களில் கூட ஜெயலலிதாவை பற்றி இது போன்ற பல அவதூறு கருத்துகளைச் சொல்லியுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பும், பாசமும் இருக்கிறது. உலகமெங்கும் செல்லும் இடமெல்லாம் தமிழில் உள்ள குறளை மேற்கோள் காட்டியே அவர் பேசி வருகிறார். தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டு கவலைப்படுவதில் மோடியை தவிர வேறு எந்த தலைவரும் கிடையாது என என  அமித்ஷா கூறியுள்ளார்.