The public was protesting when the chief minister was in the tunnel with the tarrage of the railway.
முதல்வர் திறக்க இருந்த ரயில்வே மேம்பால விரிசலில் தார் ஊற்றி மறைத்ததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. மழைகாலங்களில் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். அப்போது வாகனங்கள் எல்லாம் சாந்தப்பிள்ளை கேட் வழியாக செல்லும்.
ரெயில் வரும்போது கேட் பூட்டப்பட்டு இருந்தால் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டியது வரும்.
இதனை தவிர்க்கும் வகையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு மேம்பாலம் அமைக்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. ரெயில்வே மேம்பாலம் 1088 மீட்டர் நீளம் உடையது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் மேம்பால பணி முடிவடையும் என பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்ஜினியர்கள் தெரிவித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.
இந்நிலையில், வரும் 29ம் தேதி புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அந்த மேம்பாலத்தில் தேவைக்கு பயன்படுத்தும் முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரிசல் சரி செய்யப்பட்டே பிறகே மேம்பாலம் திறக்கப்படும் எனவும் அதுவரை மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த கூடாது எனவும் கேட்டுகொண்டார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நெடுஞ்சாலை துறையை சேர்ந்த 5 பேர் அங்கு வந்து விரிசல் ஏற்பட்டிருந்த இடத்தை தார் ஊற்றி அதில் கிராவல் மண்ணை போட்டு மூடினர்.
நெடுஞ்சாலைத்துறையின் இந்த தற்காலிக ஏற்பாடு குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் பாலத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த பாலத்தை 29ம் தேதி திறக்க தடை விதிக்க வேண்டும். பாலம் விரிசலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
