சென்னையில் தன்னை சந்தித்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடுத்த வாக்குறுதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றனர். முதலில் தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி பிரைடு கிராமில் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்த போது எடப்பாடி தரப்பு பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் எஸ்.பி.கே குழுமத்திற்குள் ஐ.டி நுழைந்தது முதலே எடப்பாடி தரப்பு பதற்றத்தில் தான் உள்ளது. காரணம் எஸ்.பி.கே குழுமத்துடன் வர்த்தக ரீதியாக எடப்பாடி குடும்பத்திற்கு தொடர்பு உண்டு.

இதனால் எந்த நேரத்திலும் தனது குடும்பத்தினர் அதிலும் தனது மகனின் மாமனார் சுப்ரமணியத்தை வருமான வரித்துறை நெருக்கினால் என்ன செய்வது என்ற யோசனையில் தான் எடப்பாடி பொழுதை கழித்து வந்தார். இந்த நிலையில் தான் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் எவ்வளவோ விஷயங்கள் கூறியிருந்தாலும் எடப்பாடியை கவலை அடைய வைக்கும் விஷயங்கள் பின்வருமாறு:- வருமான வரித்துறையின் சோதனைக்குட்பட்ட நிறுவனங்கள் 1) “எஸ்.பி.கே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், 2) எஸ்.பி.கே ஹோட்டல்ஸ், 3) எஸ்.பி.கே அன்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் 4) ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஆகும். எஸ்.பி.கே க்ரூப் ஆப் கம்பெனிகளின் மேலாண்மை இயக்குனரான திரு நாகராஜன் மாண்புமிகு முதலமைச்சர் மகன் மிதுன் என்பவரின் மாமனார் திரு பி சுப்பிரமணியம் என்பவரின் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திலும் பங்குதாரர் ஆவார்.

அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டின்படி மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பில் “நெடுஞ்சாலைகள் மற்றும் சிஅறு துறைமுகங்கள்” துறை இருக்கிறது. ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நாகராஜனுக்கும், அவர் பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் கீழ்கண்டவாறு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

அவை;

1) “திருநெல்வேலி- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச்சாலையை” விரிவுபடுத்தி, பலப்படுத்தும் ரூபாய் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2) “பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தில் திரு சேகர் (ரெட்டி- முன்பு வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளானவர்), திரு நாகராஜன், திரு பி. சுப்ரமணியம் (முதலமைச்சர் மகனின் மாமனார்) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

3) வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

4) திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3120 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் மகனின் மாமனார் திரு பி. சுப்பிரமணியம் மற்றும் திரு நாகராஜன் செய்யாத்துரை மற்றும் திரு சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. 

தனது உறவினர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தங்களை வழங்கியதோடு மட்டுமின்றி, அவர்கள் ஆதாயம் தேடுவதற்கும் துணை போயிருக்கிறார். இதன் மூலம் அரசியல் சட்டத்தின் படி மட்டுமே செயல்படுவேன். யாருக்கும் சாதகமாக செயல்பட மாட்டேன்” என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் முன்பு எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாண உறுதிமொழியை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி மீறி விட்டார். எனவே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

ஸ்டாலின் இப்படி ஒரு புகார் மனுவை கொடுக்க ஆளுநரும் அதனை பெற்றுக் கொண்டு நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் பன்வாரிலாலும் கூறியுள்ளார். இந்த தகவலை செய்தியாளர்களிடம் பேசும் போது ஸ்டாலின் உறுதிப்படுத்தினார். உடனடியாக தலைமைச் செயலாக வட்டாரமும் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்துள்ளது. அப்போது ஸ்டாலின் அளித்த புகார் மனுவை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் கூறியது உண்மை தான் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் எடப்பாடி தரப்பு மிரட்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.