உச்ச கட்ட டென்ஷனில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! தான் வேட்பாளராக நின்ற போது கூட இப்படி நடுக்கம் காணாத மனிதர் இப்போது நடுங்கிக் கொண்டிருக்கிறார் மகனின் வெற்றியை நினைத்து. தி.மு.க.வின் வாரிசு அரசியலை பற்றி சட்டசபையில் ஜெயலலிதாவின் முன்னே கடுமையாக பேசி கைதட்டலை வாங்கிக் குவித்தவர் பன்னீர். ஆனால் ஜெ., மரணித்த பின் இதோ தன் மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி நாடாளுமன்ற தொகுதியை உரிமையோடு எடுத்துக் கொண்டுவிட்டார். தேனி நாடாளுமன்றத்தில் மகனின் வெற்றிக்காக மிக கடுமையான பிரசார மூவ்களில் இருக்கிறார் பன்னீர்.

’எளிதில் வெல்வாம் எம்மவன்’ என்று களமிறங்கியவருக்கு கண்களில் பூச்சி பறக்கவிட்டுள்ளனர் எதிர்கட்சிகள். அ.ம.மு.க. சார்பில் இந்த தொகுதியில் தங்க தமிழ்செல்வனை நிறுத்தியுள்ளார் தினகரன். ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருக்கும்போதே இதே ரவீந்திரநாத்தால்தான் தங்கத்துக்கும் பன்னீருக்கும் மிக கடுமையான சண்டை. எப்போ வாய்ப்பு கிடைக்கும் பன்னீரின் காலை வாரலாம் என்று கருவிக் கொண்டிருந்த தங்கத்துக்கு, இப்போது இப்படி பிரிந்து கிடப்பதன் மூலம் மிக அருமையான சான்ஸ் கிடைத்துள்ளது. எனவே பழைய மற்றும் புதிய பகைக்கெல்லாம் ஒன்றாக சேர்த்து கணக்கை முடித்துவிட வேண்டும் என்றுசெம்ம சபதத்துடன் களமிறங்கி நிற்கிறார்.

தங்கம் பிரிக்கப்போவதெல்லாம் அ.தி.மு.க.வின் வாக்குவங்கியைதான். இது ரவிக்கு பெரும் சவால். அதேவேளையில் தி.மு.க. கூட்டணி சார்பாக எதிர்புறம் காங்கிரஸின் ஜனரஞ்சக முகமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை களமிறக்கியுள்ளனர். ரவி, தங்கம் போல் இவர் மண்ணின் மைந்தர் இல்லைதான். ஆனால் தமிழகம் தாண்டியும் பெரிதாய், பேச்சால் அறியப்பட்ட பெரியாரின் பேரன் இவர். எனவே தி.மு.க. கூட்டணியின் வாக்குகளை வளைத்து இவர் விழுங்கும்போது அது ஏற்கனவே தங்கத்தினால் சேதாரமாகியிருக்கும் ரவிக்கு மேலும் பெரிய சரிவை தரும்! என்பதில் சந்தேகமேயில்லை. 

இப்படி உள்ளூர் முகமும், வெளியூர் முகமும் இணைந்து தன் மகனின் வெற்றியை வேட்டையாடிட துடிப்பார்கள் என்று பன்னீர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் பாவம்! இதெல்லாம் போதாதென்று உட்கட்சி பகையும் பன்னீர் மகனுக்கு எதிராக வடம் பிடித்து நிற்கிறது. அதாவது தேனி தொகுதியில் சீட் எதிர்பார்த்திருந்த மாவட்ட செயலாளர் சையதுகான், முன்னாள் மா.செ. டி.டி.சிவகுமார், தேனியின் சிட்டிங் எம்.பி. பார்த்திபன், ஜக்கையன் எம்.எல்.ஏ. மகன் பால மணிமார்பன் என முக்கிய தலைகள் பல, பன்னீரின் மகனுக்காக சீட் இன்றி சாய்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொதிப்பிலிருக்க, பிரசாரத்தை துவக்கிவிட்ட ரவியோ ஏதோ  இந்த தேனி நாடாளுமன்ற தொகுதியிலேயே எம்.பி.யாகும் தகுதி தனக்கு மட்டுமே இருப்பதாக பேசி வருவது இவர்களின் கோபத்தில் மேலும் பெட்ரோலை கொட்டியிருக்கிறது.
 
எனவே அதிருப்தியாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டத்தைப் போட்டு ‘அப்பா துணை முதல்வர், மயன் (மகன்) எம்.பி! பி.ஜே.பி. ஆட்சி வந்தால் மத்தியமைச்சரும் ஆகணும்னு கனவு வேற காணுறாய்ங்க. அப்ப நாம காலாகாலத்துக்கும் இப்படி ஜால்ரா தட்டிக்கிட்டு திரியணுமாபே! சத்தமில்லாம முடிச்சுவுட்றுவோம்பே (தோற்கடிச்சுடலாம்)’ என்று முடிவெடுத்துள்ளார்களாம். இது பன்னீரின் கவனத்துக்குப் போக,  உட்கட்சி பகைவர்களை சாந்தப்படுத்தவா அல்லது எதிர்கட்சி போட்டியாளர்களை சமாளிக்கவா? என்று ஒன்றும் புரியாமல் விழிக்கிறாராம்!
அவ்வ்வ்............