கொரோனா தடுப்பு  நடவடிக்கையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கிறது என பாரத பிரதமர் பாராட்டியிருப்பதை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை  மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சட்டப் பட்டப் படிப்பு படித்த மாணவர்களுக்கு தொழில் தொடங்க 50 ஆயிரம் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மதுரையில் அம்மா பேரவை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:- கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் தமிழக முதலமைச்சர் எடுத்துக்காட்டாகவும், சீரிய முறையில், சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் இந்திய தேசத்தின் வலிமைமிக்க பாரத பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அத்துடன் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும்  மாநிலமாக அமைந்துள்ளது என்றும். கூறியுள்ளார். உலகில் தலைசிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த பிரதமர் மோடி தமிழகத்தை பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த இந்திய தேசமே தமிழகத்தைப் பாராட்டுவதற்கு சமமாகும். ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இதன்மூலம் பெருமையை முதலமைச்சர் பெற்றுத் தந்துள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். ஆனால் தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசை பிரதமர் பாராட்டியதை விமர்சனம் செய்து வருகிறார். பிரதமரின் பாராட்டை எதிர்க்கட்சித் தலைவர் கொச்சைப்படுத்திப் பேச வேண்டாம். பிரதமரின் பாராட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அநாகரிகமான செயல் ஆகும்.  எதற்கெடுத்தாலும் கேரளாவை பாருங்கள் என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு ரோல்மாடலாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரதப் பிரதமர் பாராட்டியதன் மூலம் மக்களுக்கு உண்மை எது என்று நன்றாக புரிந்துள்ளது. 

மதுரையில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. மதுரையில் ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இந்த நோய்த்தாக்கம் 4% இருந்தது, அதன் பின் 20 சதவீதமாக உயர்ந்தது. மதுரை மாவட்டம் 35 லட்சம் மக்கள் தொகை கொண்டது. இந்த நோய் தடுப்பு பணி என்பது மிகவும் சவாலான காரியம் தான் ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழிகாட்டுதல் வழங்கினார், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டதால் தற்போது கொரோனா குறைந்துள்ளது. அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து முதலமைச்சர் மதுரையில் தெளிவான விரிவான விளக்கம் அளித்துவிட்டார். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும், வேளாண் சட்ட மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் அவர்களின் பிரச்சாரம் வெற்றியை தராது. வேளாண் மசோதா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும் என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.