கொரோனாவை கட்டுப்படுத்திய பெருமை தமிழக மருத்துவர்களையே சாரும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   

மேலும் மருத்துவர்க்ள மத்தியில் அவர் ஆற்றிய உரையின் முழு விவரம்: கொரோனா நோய் தொற்றின் பரவலை மருத்துவ துறையில் முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட மேலை நாடுகளை விட குறுகிய காலத்தில் அதிவேகமாக கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்றுயது நமது நாட்டு மருத்துவர்கள் தான். என்பது நமக்கெல்லாம் பெருமை. 

மாநிலத்தில் உள்ள மிகவும் ஏழை, எளிய  நோயாளிக்கு எத்தகைய மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது என்பதை பொருத்தே மாநிலத்தின் முழு சுகாதாரம் அளவிடப்படுகிறது. எனவே ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற  அம்மாவின் அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பொழுது சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்படும் புன்னகையில் தான் உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். இதைதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று கூறினார். தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.