"இந்த ஆட்டம் போதுமா கொழந்த.." கோவை திமுக குசும்பு..! குடியரசு தின விழா அணிவகுப்பு.. குறித்த வைரல் போஸ்டர்
தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் குறித்து கோவை மாவட்ட திமுக ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு , மாநிலங்களின் அலங்கார ஊர்தி ஆகியவை கொண்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். இருப்பினும் இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு இந்த முறை நிராகரித்தது. 73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளது.மேலும் இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த வாகன ஊர்திகள் செல்ல இருப்பதாகவும் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.
இதனை பற்றி கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பாலம் என எல்லா இடங்களிலும் ‘குசும்புக்கு’ பேர் போன கோவையில், திமுகவினர் வேடிக்கையான போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், “இந்த ஆட்டம் போதுமா? கொழந்த…” என பிஜேபிக்கு எதிராக போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரில் சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதல்வர் முக ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க வைரலாகி வருகிறது.