"மதிமுக கழகப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார்.”
மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (மதிமுக- ஐடி விங்) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. கடைசியில் அவரே தன்னுடைய வாரிசை அரசியலுக்குள் கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. ஆனால், தன் மகனை கட்சிக்காரர்கள்தான் வம்படியாகக் கட்சிக்குள் கொண்டு வருவதாக வைகோவும் பேசிவந்தார். இதில் தன் மீது எந்த விமர்சனமும் இருக்கக் கூடாது என்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, அதில் வாக்கெடுப்பு நடத்தினார் வைகோ. அந்த முடிவுப்படி துரை வைகோவுக்கு மதிமுகவில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டதைப் போலவும் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதோடு துரை வைகோவுக்கு தலைமைக் கழக செயலாளர் பதவியையும் வைகோ வழங்கினார். இதனால், மதிமுகவில் சலசலப்பும் ஏற்பட்டது.
இதனையடுத்து துரை வைகோவும் தன்னுடைய அரசியல் பணியைத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இதுதொடர்பாக வைகோவின் அறிவிப்பையும் தலைமைக் கழக செயலாளரின் பணிகள் என்ன என்பது பற்றியும் துரை வைகோ தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது. கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.
கழகப்பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக்கழகச் செயலாளர் மேற்கொள்வார். கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும். மதிமுக சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (MDMK IT- WING) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்.” என்று வைகோ தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
